கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுதயார் நிலையில் 45 தேர்வு மையம்
கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுதயார் நிலையில் 45 தேர்வு மையம்கரூர்:கரூர் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும், 45 மையங்களில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 3ல்) துவங்குகிறது. கரூர் மாவட்டத்தில், 45 மையங்களில் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை, 4,741 மாணவர்களும், 5,470 மாணவியரும் என மொத்தம், 10211 பேர் தனித்தேர்வர்களாக, 52 பேர் என, 10,263 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வுக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்சார வாரியத்தின் மூலமாக தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பள்ளி மாணவர்கள், தேர்வெழுதும் மையங்களுக்கு வந்து செல்ல பஸ் வசதி இல்லாத பகுதிகளுக்கு, சிறப்பு பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், நேர்மையாகவும், செம்மையான முறையிலும் தேர்வு நடைபெறுவதற்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நிலையான படையினர் மற்றும் பறக்கும் படையினர், 112 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.