கரூர்: கரூர் உழவர் சந்தை வழியாக, அதிகாலை நேரத்தில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் - திருச்சி சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில், 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கரூர், வாங்கல், நெரூர், வெள்ளியணை, உப்-பிடமங்கலம், க.பரமத்தி, புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி-களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாள்தோறும் வருகின்றனர்.இதை தவிர உழவர் சந்தைக்கு வெளியே, காலை, மாலை நேரங்களில், 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகளை விற்னை செய்ய கடைகளை அமைத்துள்ளனர். மேலும், உழவர் சந்தைக்கு வரும் பொது மக்கள், கார், டூவீலர் உள்ளிட்ட வாக-னங்களை சாலையில் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். மேலும், உழவர் சந்தை வழியாக திருச்சி உள்ளிட்ட, தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. இதனால், திருச்சி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. இதை, கரூர் போக்குவரத்து போலீசார் கண்டு-கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.இதுகுறித்து, விவசாயிகள், பொதுமக்கள் கூறியதாவது:கரூர் உழவர் சந்தை பகுதியில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசல் காரணமாக, கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் பஸ்கள், சுங்ககேட் பகுதியை அடைய, குறைந்தபட்சம் அரைமணி நேரம் ஆகிறது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, கரூர் உழவர் சந்தை வழி-யாக அதிகாலை, 2:00 மணி முதல், 7:00 மணி வரை பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை செல்ல தடை விதிக்க வேண்டும்.இத்தகைய வாகனங்களை ஜவஹர் பஜார், பழைய திண்டுக்கல் சாலை, லைட்ஹவுஸ் கார்னர் வழியாக இயக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.