| ADDED : ஆக 20, 2024 02:56 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள், 52. இவரது மகன் கிரி குளித்தலை சுங்ககேட் பகுதியில் சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். மேலும், இவரது வீட்டின் முன் சிமென்ட் விற்பனை செய்யும் சிறிய கடை உள்ளது.நேற்று காலை 7:30 மணியளவில் காளியம்மாள் தன் வீட்டிலிருந்து சாலையை கடந்து பால் வாங்க சென்றார். அப்போது இரு வடமாநில வாலிபர்கள், காளியம்மாளிடம் சிமென்ட் என்ன விலை எவ்வளவு மூட்டைகள் உள்ளது என விசாரித்தனர். அப்போது, தனது வீட்டின் கேட்டை திறந்து ஒரு நபர் செல்வதை துாரத்தில் பார்த்த போது, தன் மகன்தான் செல்கிறான் என நினைத்து பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, சிறிது நேரம் கழித்து வீட்டு வாசலில் மகன் பைக்கை நிறுத்துவதை பார்த்து அச்சம் அடைந்த காளியம்மாள், உடனே வீட்டின் மாடியில் பார்த்த போது, வாலிபர் ஒருவர் அங்கிருந்த கிரீமை எடுத்து முகத்திற்கு தடவி கொண்டிருந்ததையும், பீரோ, பேக்குகள் திறந்த நிலையில் சிதறி கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், அங்கிருந்த மொபைல்போனை எடுத்துக் கொண்டு அவருடையது என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதை பார்த்த மகன் கிரி, அந்த வாலிபரை பிடித்த போது, தப்பிக்க முயன்றார். அப்போது, வீட்டில் உள்ள நாய் அந்த வாலிபரின் காலை கவ்வி பிடித்து கடித்ததில் கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது தன்னுடன் மேலும் இருவர் வந்துள்ளனர்; அவர்களை பிடிக்காமல் என்னை மட்டும் ஏன் பிடித்தீர்கள் என தில்லாக பேசி உள்ளார். குளித்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரிப்பதற்காக அவரை பைக்கில் அழைத்து சென்றனர்.