கரூர்:கரூரில், போலீசாரை தாக்கிய வழக்கில், பெண் எஸ்.ஐ., மகன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.கரூர், பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகில் ராமனுார் பிரிவு சாலையில், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கரூர் ஆயுதப்படை போலீஸ் சத்திவேல், 23, நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லை நகரை சேர்ந்த சூர்யா, 23. இவர் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,லதாவின் மகன். கரூர் ஜெகதாபியை சேர்ந்த ஸ்ரீரங்கன், 23, உள்பட நான்கு பேர் ஒரே பைக்கில் வந்துள்ளனர்.இவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சக்திவேல் தடுத்துள்ளார். அதில், ஆத்திரமடைந்த சூர்யா, ஸ்ரீரங்கன் ஆகியோர், அவரை தாக்கினர். பின்னர் நான்கு பேரும் அங்கிருந்து சென்றனர். காயமடைந்த சக்தி வேல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார் விசாரித்து சூர்யா, ஸ்ரீரங்கன் உள்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், பசுபதி பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வந்த லதா மகள் வைசாலினி நிருபர்களிடம் கூறுகையில்,''நேற்று முன்தினம் முதல், என் அண்ணன் சூர்யாவை பார்க்க முடியவில்லை. இது குறித்து ஸ்டேஷனில் கேட்ட போது, தரக்குறைவான வார்த்தைகளை பேசுகின்றனர். அண்ணனை தொடர்ந்து தாக்கியுள்ளனர். போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா,'' என்றார்.