கரூர்:விபத்துகள்
அதிகளவில் நடக்கும், மண்மங்கலம் பிரிவில் உயர்மட்ட மேம்பாலம்
கட்டுவதற்காக, சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது.கரூர்-மதுரை
தேசிய நெடுஞ்சாலை பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, திருச்சி சாலை
கோடங்கிப்பட்டி, வீராக்கியம் பிரிவு, சேலம் தேசிய நெடுஞ்சாலை
பெரிச்சிப்பாளையம் பிரிவு, செம்மடை பிரிவு, மண்மங்கலம் பிரிவு
மற்றும் தவிட்டுப்பாளையம் பிரிவுகளில் அடிக்கடி விபத்துக்கள்
ஏற்பட்டு, சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.இதனால்,
குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலை பிரிவுகளில், மேம்பாலம் அல்லது குகை
வழிப்பாதை அமைக்க வேண்டும் என, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள்
கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து கடந்த, 2019 முதல் பெரிய
ஆண்டாங்கோவில் பிரிவு, பெரிச்சிப்பாளையம் பிரிவு, செம்மடை பிரிவு,
தவிட்டுப்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
சார்பில், மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி நிறைவு பெற்று தற்போது,
பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.இந்நிலையில்,
கரூர்-சேலம் தேசிய நெடுஞ் சாலை மண்மங்கலம் பகுதியில் மேம்பாலம் கட்ட
நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, இரண்டு பக்கமும் சர்வீஸ்
சாலைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:கரூர்-சேலம்
தேசிய நெடுஞ்சாலையில், விபத்துகள் நடக்கும் பகுதியாக, மண்மங்கலம்
பிரிவு உள்ளது. அந்த பகுதிகளில் நடந்த விபத்துகளில் பலர்
உயிரிழந்துள்ளனர். இதனால், மேம்பாலம் கட்டக்கோரி, பலமுறை சாலை
மறியல், உண்ணாவிரத போராட்டம் நடந்துள்ளது. பின்னர் மண்மங்கலம்
பிரிவில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது மகிழ்ச்சியாக உள்ளது.
மண் மங்கலம் பிரிவு, நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியை இணைக்கும்
முக்கிய பகுதியாக உள்ளது. மண்மங்கலம் முதல் மோகனுார் வரை தார் சாலை
மற்றும் காவிரியாற்றில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மண்மங்கலம்
பிரிவில் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. எனவே, விரைவாக
மண்மங்கலம் பிரிவில், உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகளை, தேசிய
நெடுஞ்சாலை துறை ஆணையம் விரைவாக முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.