கரூர்: எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் விலைகளை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின், மண்டல பயிற்சி முகாமில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கரூரில், சி.ஐ.டி.யு., கட்டுமான தொழிலாளர் சம்மேனத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. சம்மேளன உதவி பொதுச்செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில குழு சார்பில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, பெரம்பலுார், அரியலுார், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டலத்திற்குட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு கூட, அரசு தடை விதித்திருப்பதால் மணலுக்கு மாற்றாக கட்டுமான வேலைகளுக்கு எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பி.சாண்ட் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் ஆகியவற்றின் விலை உயர்வின் காரணமாக, கட்டுமான தொழில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, ஏற்கனவே வீடு கட்டும் ஒப்பந்தம் மேற்கொண்டவர்கள், அன்றைக்கு இருந்த விலை அடிப்படையில் ஒப்பந்தம் செய்த பின்னணியில், தற்போது விலை ஏற்றம் காரணமாக வீட்டு உரிமையாளர்களுடன் முரண்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் விலைகளை, எவ்வித கட்டுப்பாடுமின்றி உயர்த்தக்கூடிய கல்குவாரி உரிமையாளர்களின் நடவடிக்கையை முறைப்படுத்திடவும், இத்தொழிலை நம்பியுள்ள அனைவரையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.கட்டுமான தொழிலாளர் சங்க கரூர் மாவட்ட செயலாளர் ராஜாமுகமது, சி.ஐ.டி.யு., மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கட்டுமான சம்மேளன மாநில பொதுச் செயலாளர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.