| ADDED : ஜூலை 21, 2024 03:02 AM
அரவக்குறிச்சி;அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுப்பதால், பிரச்னை ஏற்படுகிறது.அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இங்கு வணிக நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள், வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10, 20 ரூபாய் நாணயங்களை அரவக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். ஒரு சில வியாபாரிகள் வாங்கினாலும், அதனை திரும்ப மற்ற வாடிக்கையாளர்களிடம் கொடுக்கும்போது அவர்கள் வாங்க மறுக்கின்றனர்.10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்களை அனைத்து வியாபாரிகளும் வாங்க வேண்டும், நுகர்வோரும் வாங்கி கொள்ள வேண்டும் என, பல முறை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. சென்னை, சேலம், கோவை போன்ற நகரங்களில் 10, 20 ரூபாய் நாணயங்களை பஸ் கண்டக்டர்கள் சமீப காலமாக வாங்கி வருகின்றனர். அரவக்குறிச்சி பகுதியில் பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை பஸ் கண்டக்டர்கள் வாங்குவதில்லை. சில நேரங்களில் நாணயங்களால் வியாபாரிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு விடுகிறது.இப்பிரச்னைக்கு, மாவட்ட நிர்வாகமோ அல்லது வங்கி நிர்வாகமோ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பகுதி வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.