| ADDED : ஜூலை 21, 2024 02:51 AM
கரூர்;ஊழியர்களின் உரிமைக்கு உத்தரவாதமளிக்காத, முத்தரப்பு ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும் என, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தி உள்ளது.கரூர் சுங்ககேட்டில் உள்ள, சி.ஐ.டி.யு., சங்க அலுவலகத்தில், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின், 8 வது ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வெள்ளையன் தலைமை வகித்தார். ஊழியர்களின் உரிமைக்கு உத்தரவாதமளிக்காத, முத்தரப்பு ஒப்பந்தத்தை திரும்ப பெற்று நல அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தி இறுதிப்படுத்த வேண்டும். மின் வாரியத்தை பிரிக்க பிறப்பித்த வாரிய உத்தரவு, 6, 7 யும், இதனை அமலாக்க பிறப்பித்த அரசு உத்தரவு, 32யும் திரும்ப பெற வேண்டும். விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் பரிசீலித்து மருத்துவ செலவு தொகையை வழங்க வேண்டும். ஜனவரி 2024 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர் வெள்ளையன், மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மின் வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில துணைத்தலைவர் பஷீர் உள்பட பலர் பங்கேற்றனர்.