கரூர்:கரூர் அருகே காந்தி கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 45. கரூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரிடம், சென்னையை சேர்ந்த, 'சவுக்கு சங்கர் மீடியா' முன்னாள் ஊழியர் விக்னேஷ், 35; ஆன்லைன் வாயிலாக முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய கிருஷ்ணன், கடந்த, 2023ல் அக்., மாதம் ஏழு லட்சம் ரூபாயை, விக்னேஷிடம் கொடுத்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் ஏழு லட்ச ரூபாயை, அதிக லாபத்துடன் விக்னேஷ் தரவில்லை. இதுகுறித்து, கேட்ட போது, விக்னேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த மாதம், கிருஷ்ணன் கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.புகாரின்படி, கரூர் டவுன் போலீசார், விக்னேசை கைது செய்து விசாரித்த போது, கிருஷ்ணனிடம் வாங்கிய, ஏழு லட்ச ரூபாயை, யுடியூபர் சவுக்கு சங்கரிடம் கொடுத்து விட்டதாக தெரிவித்தார்.இதையடுத்து, சவுக்கு சங்கர் மீதும், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.சென்னை புழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள, சவுக்கு சங்கரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து கடந்த, 9ல் கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன், ஆஜர்ப்படுத்தினர். அப்போது, சவுக்கு சங்கரை நான்கு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, கரூர் டவுன் போலீசாருக்கு அனுமதி அளித்தார். விசாரணை முடிந்த பின் போலீசார், சவுக்கு சங்கரை நேற்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது, நீதிபதி பரத்குமார், வரும், 23ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில், சிறையில் அடைக்க உத்தவிட்டார்.இதையடுத்து, சவுக்கு சங்கரை கரூர் டவுன் போலீசார் பலத்த பாதுகாப்புடன், சென்னை புழல் சிறைக்கு வேனில் அழைத்து சென்றனர்.