| ADDED : மே 21, 2024 11:17 AM
அரவக்குறிச்சி: குழாய் பதிக்கும் பணியால், தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருப்பதை கண்டித்தும், அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் போதிய கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தியும், கரூர் மாவட்ட ஹிந்து முன்னணி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.அரவக்குறிச்சியில் இருந்து பழநி செல்லும் சாலையில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், குழாய் பதிக்கும் பணி தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குழிகள் சரிவர மூடப்படாமல் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, குழாய் பதிக்கும் பணியை பள்ளிகள் திறக்கும் முன் விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரியிடம் மனு அளித்தனர்.இதே போல அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு செய்ய வரும் பொது மக்களுக்கு போதிய கழிவறை வசதி, இருக்கை வசதி, ஆவணங்களில் கையெழுத்திட அலுவலகம் செல்லும் போது நாற்காலி வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்.