பூச்சிகளை கட்டுப்படுத்த 3-ஜி கரைசல் பயிற்சி
கரூர்:கரூர் மாவட்டம், ஒரத்தை கிராமத்தில், கரூர் வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் சார்பில், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ், '3ஜி' கரைசல் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இதில், அக்கல்லுாரியின் மாணவர்களான அருண்குமார், அருள், அகிலன், ஆகாஷ், ஆகாஷ் குமார், பூமிஷ் மற்றும் தீபக் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர். இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் ஆகிய, மூன்று காரத்தன்மை கொண்ட இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் தாவர அடிப்படையிலான பயிர் பாதுகாப்பு கரைசலே, '3-ஜி' கரைசல் ஆகும்.இதை தயாரிக்கும் முறை, அதன் முக்கியத்துவம் மற்றும் பயிர்களில் காணப்படும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் அதன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது. மேலும், உள்ளூரில் எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி, குறைந்த செலவில் பயிர்களை பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.