பண்டிகை காலங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்
அரவக்குறிச்சி:கரூரிலிருந்து, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி செல்லும் பயணிகளை, தனியார் பஸ்களில் ஏற்றிச் செல்ல மறுப்பதால், கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கரூரிலிருந்து, திண்டுக்கல், பழநி ஆகிய இடங்களுக்கு செல்லும் தனியார் பஸ்கள் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வழியாகத்தான் செல்ல வேண்டும். இப்பகுதி மக்கள், 2,000க்கும் மேற்பட்டோர் தனியார் பஸ்களில் கரூர் சென்று வருகின்றனர்.பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் நாட்களில் தனியார் பஸ்களில் பயணிகள் அதிகம் ஏறுவதால் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பயணிகளை ஏற்க மறுக்கின்றனர்.இதனால் நீண்ட நேரம் காத்திருந்து, அரசு பஸ்களில் வர வேண்டிய நிலைமை உள்ளது. பண்டிகை காலங்களில் அதிகப்படியான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.