கரூர் : நிலம் அபகரிப்பு புகார் தொடர்பான வழக்கில், இரண்டாவது முறையாக முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி., தீவிரம் காட்டி வருகின்றனர்.கரூர் மாவட்ட, அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட பலர் மீது வாங்கல் போலீசார், தொழில் அதிபர் பிரகாஷ் கொடுத்த புகாரின்படி, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறுபிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும், கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை சிலர் போலியான ஆவணங்கள் மூலம், கிரையம் செய்து கொண்டதாக, கரூர் மேலக் கரூர் சார்ப்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரின்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசாரும், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை கடந்த, 25 நாட்களுக்கு மேலாக தேடி வருகின்றனர். இந்த இரு வழக்குகளில், முன் ஜாமின் கேட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின், மனுக்கள், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில், இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அவரது அலுவலகம் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.அப்போது, கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதற்குள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், முன் ஜாமின் பெற்று விட வேண்டும் என்ற முயற்சியில் தலைமறைவாக உள்ள, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், முழு வீச்சில் வழக்கறிஞர்கள் துணையுடன் முயற்சி செய்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.