உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போலீஸ் ஸ்டேஷனில் ஆவணங்களை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள்

போலீஸ் ஸ்டேஷனில் ஆவணங்களை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள்

கரூர்:கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்., 27ல் நடந்த த.வெ.க., பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களை, சம்பவ இடத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு ஆம்புலன்கள் மூலம், கரூர் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளுக்கு டிரைவர்கள் அழைத்து சென்றனர். அவர்களை நேரில் அழைத்து, விசாரணை நடத்த ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்த் திட்டமிட்டு இருந்தார். த.வெ.க., கூட்ட வழக்கை, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு குழுவுக்கு மாற்றி, நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை, வடக்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்தில் ஒப்படைக்க ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்த் நேற்று சென்னை சென்றுள்ளார். வழக்கு விசாரணைக்கு வந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், 23 பேர், அரசு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஐந்து பேர் தங்களுடைய ஆதார் நகல், லைசென்ஸ் நகல், இன்ஸ்சூரன்ஸ் சான்று நகல் உள்ளிட்ட, பல்வேறு ஆவணங்களை, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.ஆவணங்களை ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம், ஐ.ஜி., அஸ்ரா கார்க் கரூர் வந்த பின், ஆம்புலன்சை அழைத்தது யார், எந்த மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு சென்றனர், மீட்கப்பட்டவர்கள் உயிருடன் இருந்தனரா அல்லது இறந்து கிடந்தனரா என, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை