உயர்கல்வி தொடராத 27 மாணவ, மாணவியருக்கு உதவி: கலெக்டர்
கரூர், ''பெற்றோரை இழந்த உயர்கல்வி தொடராத, 27 மாணவ, மாணவியருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் பேசினார்.கரூர் கலெக்டர் அலுவலக, கூடுதல் அலுவலக கூட்டரங்கில், பெற்றோரை இழந்த உயர்கல்வி தொடராத மாணவ, மாணவியருக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரின் எதிர்கால கனவை நனவாக்கும் வகையில், உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்பு, பட்டய படிப்புகள் என்னென்ன உள்ளன, கல்லுாரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, வேலை வாய்ப்பு, போட்டி தேர்வுகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பெற்றோரை இழந்த உயர்கல்வி தொடராத, 27 மாணவ, மாணவியரின் உயர்கல்வி தடைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு, 9566566727 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு பேசினார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி, உதவி ஆணையர் கலால் கருணாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலசக்திகங்காதரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.