நிரம்பும் நிலையில் ஆத்துப்பாளையம் அணை: தண்ணீர் திறப்பு எப்போது?
கரூர், க.பரமத்தி அருகே, ஆத்துப்பாளையம் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால், நொய்யல் பாசன வாய்க்காலில், எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்., யூனியன் கார்வாழி ஆத்துப்பாளையம் பகுதியில், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது அணை கட்டப்பட்டது. அதன் மூலம், அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னுார், அத்திப் பாளையம், குப்பம், புன்னம், வேட்டமங்கலம், புஞ்சை புகளூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, ஆத்துார், புஞ்சை கடம் பங்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிப்பாளையம், மின்னாம்பள்ளி, காதப்பாறை, பஞ்சமா தேவி ஆகிய கிராமங்களில், 19 ஆயிரத்து, 480 ஏக்கர் பாசன வசதியை பெறுகிறது.கடந்த இரண்டு மாதங்களாக, வடகிழக்கு பருவமழை மற்றும் எல்.பி.பி., வாய்க்கால் உபரி நீர் காரணமாக, ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 26.90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 25.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 12 கன அடி தண்ணீர் வந்தது.இதனால், ஆத்துப்பாளையம் அணை விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதால், பாசன தேவைக்காக, நொய்யல் பாசன வாய்க்காலில் எப்போது, தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், கரூர் மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.