| ADDED : பிப் 04, 2024 11:12 AM
குளித்தலை: குளித்தலை அரசு மருத்துவமனை கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்டு, மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து வந்த, தி.மு.க., அரசு கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக செயல்படும் என, அமைச்சர் செந்தில்பாலாஜி, அப்போதைய கலெக்டர் பிரபு சங்கர் அறிவித்தனர். மீண்டும் மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்படவேண்டும் என வலியுறுத்தி, பா.ஜ.,- கம்யூனிஸ்ட், காங்., தே.மு.தி.க., மற்றும் பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, கடந்த மாதம் மீண்டும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்படும் என முறையாக அறிவிப்பு செய்யப்பட்டது. 2.50 கோடி மதிப்பில் சிடி ஸ்கேன் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்நிலையில் பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிய மருத்துவமனை கட்டடங்கள் கட்டுவதற்கு, தமிழக அரசு, 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து வரும், 9ல் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணி புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை செய்தும், சிடி ஸ்கேன் மையத்தை தொடங்கி வைக்கவும் உள்ளார். அரசு மருத்துவமனையில் அமைச்சர் வருகைக்காக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.