அனுமதியின்றி கற்களை வெட்டி எடுத்த 5 பேர் மீது வழக்கு பதிவு
நாமக்கல்: நாமக்கல் அருகே, அனுமதியின்றி கற்களை வெட்டி எடுத்ததாக, 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.நாமக்கல் அருகே, கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கரடு புறம்போக்கில், உரிய அனுமதியின்றி கற்களை வெட்டி எடுப்பதாக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்தீபன் தலைமையில், சேந்தமங்கலம் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசாருடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு கல் உடைத்து கொண்டு இருந்த தொழிலாளர்கள், வாகனங்களின் டிரைவர்கள் அதிகாரிகளை கண்டவுடன் தப்பியோடினர். இதையடுத்து, கல்குவாரியில் நிறுத்தப்பட்டு இருந்த பாறைகளை உடைக்கும் கற்கள் வெட்டி எடுக்கும் இயந்திரம் (ஹிட்டாச்சி), கம்பரசர் டிராக்டர்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் உள்பட, 23 வாகனங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இவை நாமக்கல் ஆயுதப்படை வளாகம் மற்றும் சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி இருந்த வாகனங்களை, கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து, விட்டமநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., கோகிலா, 45, நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்படி, சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத்ததாக சிவக்குமார், சுபாஷ், வி.சி.பி.பழனிசாமி, மற்றொரு பழனிசாமி மற்றும் சந்துருமலை ஆகிய, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.