குளித்தலை, நகுளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., வாலாந்துார் கிராமத்தில் தார்ச்சாலை, தெருவிளக்கு, பொது நவீன கழிப்பிடம் அமைத்தல், கழிவுநீர் வடிகால் அமைத்தல், நகர பஸ் வசதி செய்தல், பொது மயானம் செல்லும் பாதையில், தனி நபர் அமைத்துள்ள வேலியை அகற்றுதல், குளித்தலை -மணப்பாறை நெடுஞ்சாலையில், வாலாந்துார் பிரிவு வரை மின்விளக்கு அமைத்தல், வாலாந்துார் கிராமத்திற்கு ரயில்வே குகை வழிப்பாதை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இ.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று வாலாந்துார் கிராமத்திற்கு அடிப்படை வசதி செய்வது தொடர்பாக, குளித்தலை தாசில்தார் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் இந்துமதி தலைமை வகித்தார். குளித்தலை ஒன்றிய ஆணையர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், மேற்கண்ட கோரிக்கைகளை, மாவட்ட நிர்வாக அனுமதி பெற்று, பணிகள் மேற்கொள்ளப்படும்.மேலும், குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குனரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, தட்டுப்பாடு இல்லாமல் விஷமுறிவு மருந்து மாத்திரை கையிருப்பு வைத்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் முத்துசெல்வன், வருவாய்துறையினர், போக்குவரத்து பணிமனை மேலாளர், குளித்தலை நகராட்சி பொறியாளர் மற்றும் வாலாந்துார் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.