| ADDED : மே 28, 2024 07:03 AM
கரூர் : கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வேளாண் பணிகளில் ட்ரோன்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.விவசாயத்தில் நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறையை, நிவர்த்தி செய்யவும் விவசாயிகள் காலத்தே சாகுபடி பணிகளை மேற்கொண்டு, பயிர் உற்பத்தி திறனை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு, வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி வருகிறது.இதன்படி, கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று ட்ரோன் வாங்கப்படுகிறது. இதற்கான செயல்முறை விளக்க நிகழ்ச்சி கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் தங்கவேல் முன்னிலையில் நடந்தது. அப்போது, அதிகாரிகள் கூறியதாவது: ஆட்கள் மூலம் உரம் தெளிக்க இரண்டு நாள், அதிக கூலி செலவும் ஏற்படும். ஆனால், ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும்போது, 8 நிமிடங்களில் பணிகள் முடிந்து விடும், குறைந்த செலவு ஏற்படுகிறது. ஆட்கள் மருந்து தெளிக்கும்போது, 50 சதவீதம் வீணாகிவிடும். துல்லியமாக பயிர்களில் படுவதும் கடினம். இப்போது ட்ரோன் தொழில்நுட்பத்தில் பரப்பையும், பயிரையும் துல்லியமாக கணக்கிட்டு பதிவு செய்துவிட்டால் ட்ரோன் தானாக தெளித்து விடுகிறது. இவ்வாறு கூறினர்.