கரூர் : அரசு உதவி பெறும் பள்ளி மாணவியருக்கு, புதுமை பெண் திட்டத்தில் கல்வி உதவி தொகை பெறலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி புதுமை பெண் திட்டத்தின் கீழ், ஆறாம்- வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகள், இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் பயின்ற மாணவியர்.ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் சேர்ந்து பயின்ற மாணவிகள், இளங்கலை,அறிவியல், தொழில் நுட்ப கல்வி, பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், டிப்ளமா, ஐடிஐ, ஆரம்ப கல்வியில் பட்டயப்படிப்பு, சட்டம், விவசாயம் சார்ந்த படிப்புகளை கல்லுாரியில் பயில்பவர்களுக்கு, முதல் உயர்கல்வி படிப்பதற்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் பயின்று கல்லுாரியில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும், இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம். கல்லுாரியில் சென்று பயிலும் மாணவியருக்கே உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.