ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் கரூரில் திடீர் நிறுத்தத்தால் முற்றுகை போராட்டம்
கரூர், ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில், பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று கரூரில் நிறுத்தப்பட்டது. இதனால், திருச்சிக்கு டிக்கெட் எடுத்து வந்த பயணிகள், கரூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அறையை முற்றுகையிட்டனர்.திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை, பொறியியல் பராமரிப்பு பணிகள் நடந்தன. இதனால் நேற்று காலை, 8:10 மணிக்கு புறப்பட்ட ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் கரூரில், 10:30 மணிக்கு நிறுத்தப்பட்டது. இதனால் ஈரோட்டில் இருந்து, திருச்சிக்கு டிக்கெட் எடுத்து வந்த, 50க்கும் மேற்பட்ட பயணிகள், குழந்தைகளுடன் கரூரில் இறக்கி விடப்பட்டனர். அப்போது, ஆத்திரமடைந்த பயணிகள், கரூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அறையை முற்றுகையிட்டனர். இதையடுத்து, ரயில்வே நிலைய அதிகாரிகள், பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயிலில், திருச்சி செல்லுமாறு பயணிகளுக்கு அறிவுரை வழங்கினர்.இதுகுறித்து, பயணிகள் கூறுகையில், 'ஈரோட்டில் இருந்து, திருச்சிக்கு டிக்கெட் வாங்கும் போது, ரயில் திருச்சி செல்லாது என, ரயில்வே ஊழியர்கள் சொல்லவில்லை. கரூர் வந்த பிறகுதான், ரயில் திருச்சி செல்லாது என தெரிய வந்தது. ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம்தான் இந்த குளறுபடிக்கு காரணம்' என்றனர். பிறகு பாலக்காட்டில் இருந்து, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மதியம், 12:45 மணிக்கு வந்த ரயிலில் பயணிகள் திருச்சிக்கு புறப்பட்டனர். இதனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.