உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போலியாக மாணவ, மாணவியர் சேர்க்கை :கரூர் அரசு பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு

போலியாக மாணவ, மாணவியர் சேர்க்கை :கரூர் அரசு பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு

கரூர், கரூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் போலியாக மாணவ, மாணவியர் சேர்க்கை உள்ளதா என, அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில், 1,035 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 1.61 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த, 9ம் தேதி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். இதற்காக அவர் வருகைக்கு, இரு நாட்களுக்கு முன், தமிழக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.கரூர் காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என தெரியவந்தது. ஆய்வு குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம், அந்த பள்ளியை சேர்ந்தவர்கள் கூறவில்லை. தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், காந்திகிராமம் பள்ளியில், மாணவர்கள், 'ஆப்சென்ட்' குறித்து கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் கேட்டுள்ளார். ஆனால், மாவட்ட கல்வி அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளனர். பின், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, கரூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூறியதாவது:ஆசிரியர் பணியிடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில், சில பள்ளிகள் மாணவர் எண்ணிக்கையில் போலியாக கணக்கு காட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் பள்ளிக்கல்விதுறை நிர்வாகத்திற்கு எழுந்துள்ளது. இதனால், அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை நேரடியாக ஆய்வு செய்யும் பணி, நேற்று முன்தினம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எமிஸ் தளத்தில் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விபரங்கள் உறுதி செய்யப்படுகின்றன. மாணவர்கள் யாரேனும் நீண்டகால விடுப்பில் இருந்தால், தலைமை ஆசிரியர் அவரை எமிஸ் தளத்தில் இருந்து நீக்க வேண்டும். அவர்களை, பள்ளி செல்லா குழந்தைகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். போலியாக கணக்கு காட்டியுள்ளது கண்டறியப்பட்டால், தவறு இழைத்த பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.இவ்வாறு கூறினர்.கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வமணி (பொ) கூறுகையில், ''கரூர் காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள், 'ஆப்சென்ட்' தொடர்பாக ஆய்வு கூட்டத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. எமிஸ் தளத்தின் எண்ணிக்கை, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை ஒப்பிட்டு மேற்கொள்ளும் ஆய்வு, ஆண்டுதோறும் நடக்கும். அதன்படி, தற்போது பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ