கரூர்: அமராவதி ஆற்றில் இருந்து தாதம்பாளையம் ஏரிக்கு, தண்ணீர் கொண்டு செல்ல, கிடப்பில் உள்ள அமராவதி வெள்ள உபரி நீர் திட்டத்தை, செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம், பவித்திரம் பஞ்சாயத்தில் கடந்த, 1881ம் ஆண்டில், 360 ஏக்கர் நிலப்பரப்பில் தாதம்பாளையம் ஏரி உருவாக்கப்பட்டது. அமராவதி ஆற்றின், பிரதான பள்ளப்பாளையம் ராஜவாய்க்காலில், தண்ணீர் இல்லாத போது, தாதம்பாளையம் ஏரி தண்ணீர் மூலம், 3,000 ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காலப்போக்கில் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களில், ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. பின், பொதுப்பணித்துறை வசம் இருந்த, ஏரி தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.கடந்த, 2002ல் நஞ்சை தலையூர் முட்டணையில் இருந்து தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல, அமராவதி வெள்ள உபரி நீர் திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த, 22 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:ஆண்டுதோறும் நவ., டிச., மாதங்களில் பெய்யும் மழைநீர், ஆரியூர் வழியாக உப்பாறு என்ற பெயரில், அமராவதி ஆற்றில் கலந்தது. அதை தடுக்க ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது தான் தாதம்பாளையம் ஏரி. தற்போது, சீமை கருவேல மரங்கள் முளைத்து வறண்ட நிலையில் உள்ளது.அமராவதி ஆற்றில் ஓடும் தண்ணீரை, தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கடந்த, 1950 முதல் போராடி வருகிறோம். அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் உள்ளது. இறுதியாக கடந்த, 2002ல், 16 கோடி ரூபாய் மதிப்பில், அமராவதி ஆறு நஞ்சை தலையூர் முட்டணையில் இருந்து, தாதம்பாளையம் ஏரிக்கு, தண்ணீர் கொண்டு செல்ல போடப்பட்ட திட்டமும் கிடப்பில் உள்ளது.இதனால், கடந்த ஜூன் மாதம் முதல் அமராவதி ஆற்றில் வந்த, தண்ணீர் காவிரியாறு வழியாக கடலுக்கு சென்று விட்டது. இதனால், அமராவதி வெள்ள உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம், சின்னமுத்தாம்பாளையம் குளம், ஆரியூர் குளம், நல்லிசெல்லி பாளையம் குளம், தொட்டிவாடி குளம், நிமித்தப்பட்டி குளம், கழுவம்பாளையம் குளங்களில் தண்ணீர் தேங்கும். இதனால், 75க்கும் மேற்பட்ட கிராமங்களில், நிலத்தடி நீர் மற்றும் கிணறுகளில் நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும், 15,0000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தாதம்பாளையம் ஏரி நிலவரம்ஏரியின் பரப்பளவு, 360 ஏக்கர், ஏரியின் ஆழம் முன்பு, 20 அடி தற்போது, 10 அடி. ஏரியின் கொள்ளளவு, 0.3640 மில்லியன் க.மீ., ஏரியின் கரைபரப்பு, நான்கு அடி அகல கரை, பாசன பரப்பு, 15,000 ஏக்கர்.