உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் தொடங்கியது நாவல் பழம் சீசன் மரங்களுக்கு வலை கட்டும் விவசாயிகள்

கரூரில் தொடங்கியது நாவல் பழம் சீசன் மரங்களுக்கு வலை கட்டும் விவசாயிகள்

கரூர், :கரூர் மாவட்டத்தில், நாவல் பழம் சீசன் தொடங்கியுள்ளது. இதனால், நாவல் பழ மரங்களுக்கு, வலை கட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.துவர்ப்பு சுவை மற்றும் மருத்துவ குணம் கொண்ட நாவல் பழம் சீசன் தற்போது தொடங்கியுள்ளது. கருநாவல், கொடி நாவல் மற்றும் சம்பு நாவல் என, மூன்று வகைகளில், நாவல் பழங்கள் உற்பத்தியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கருநாவல் பழம் அதிக இடங்களில், உயர்ந்த மரங்களில் விளைகிறது. கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் அதிகளவில் நாவல் மரங்கள் உள்ளன. குறிப்பிட்ட ஏக்கர்களில், விவசாய நிலங்களிலும் நாவல் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. வழக்கமாக ஆண்டுதோறும், கோடை காலம் நிறைவு பெறும் நிலையில், நாவல் மரங்களில் பூக்கள் உற்பத்தியாகி, காய்கள் பிடிக்க தொடங்கும்.ஆனி மாத இறுதியில் இருந்து, நாவல் பழங்கள் விற்பனைக்கு வரும். நடப்பு ஆடி மாதம் முதல், வரும் ஆவணி மாதம் வரை நாவல் பழம் சீசன் காலமாகும். பொதுவாக ஆடி மாதங்களில், அதிவேகமாக காற்று வீசும். அப்போது, பழுத்த நிலையில் உள்ள நாவல் பழங்கள் கீழே விழுந்து விடும் நிலை உள்ளது.அதை தடுக்க, விவசாயிகள் நாவல் மரக்கிளைகளை சுற்றி, வலை கட்டும் பணியில் கரூர் மாவட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, அதிகளவில் கரூர் காமராஜ் மார்க்கெட், உழவர் சந்தைகளில், ஒரு கிலோ நாவல் பழம், 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் அதிகம்பேர் வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை