| ADDED : நவ 18, 2025 01:22 AM
கரூர்,கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு உரிய இடங்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்துவதை கண்டித்து, அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது, அ.தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:வெண்ணைமலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாம் நிலம் தொடர்பான வழக்கு காரணமாக, கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மேற்கொண்டனர். தற்போது குடியிருப்புகளுக்கு, சீல் வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 1967ம் ஆண்டு இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், 50 ஆண்டுகள் கழித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என, நீதிமன்றத்தில் முறையிட அவகாசம் கேட்டால், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் பதில் அளிக்கவில்லை. தமிழக அரசின் கீழ் உள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறையினரிடம் கால அவகாசம் வாங்கி தர வேண்டிய மக்கள் பிரதிநிதி, வாய்க்கு வந்ததை பேசி மக்களை ஏமாற்றி வருகிறார். ஆட்சி மாற்றம் வந்த பின் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.பின் கரூர் எம்.பி.,ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:கரூர் வெண்ணைமலை குடியிருப்பு மற்றும் கடை பிரச்னைகளை பொறுத்தவரை, நீதிமன்றத்துக்கு மக்கள் சார்பில் வேண்டுகோளை வைக்க விரும்புறோம்.இது சட்டப்பூர்வமான மக்கள் பட்டா வைத்திருக்கக்கூடிய இடம். இது வந்து கோவில் நிலம் கிடையாது. கரூர் மாவட்டத்தில், 20 கோவில்களில் நிலம் குறித்து ஒரு தனிநபர் வழக்கு தொடர்கிறார். இதற்கான காரணம் தெரியவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, நீதிமன்றத்தில் போராடி ஆணையை பெற இருக்கிறோம். அதற்கான கால அவகாசத்தை வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.