உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 2,046 ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 2,046 ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசு

கரூர் ;கரூரில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, 2,046 ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு, 30.95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை, எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி வழங்கினார்.கரூர் அருகே வெண்ணைமலை அட்லஸ் திருமண மண்டபத்தில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி சான்றிதழ், பரிசு வழங்கி பேசியதாவது:தமிழ்நாடு, கல்வியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாறி உள்ளது. பள்ளிகளில் காலை உணவு வழங்குவது சிறப்பான திட்டமாகும். கரூர் மாவட்டத்தில், 67 அரசு ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 23 கோடி மதிப்பீட்டில், 113 வகுப்பறை கட்டடங்கள், 74 பள்ளிகளுக்கு, 2.5 கோடி ரூபாய் மதிப்பில் கழிப்பறைகள், 14 பள்ளிகளுக்கு, 86 சமையலறை கட்டடங்கள், 12 பள்ளிகளுக்கு, 1.32 கோடி ரூபாயில் சுற்றுச்சுவர்கள், 69 பள்ளிகளில் பயிலும், 22,831 மாணவ, மாணவியருக்கு, 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன. 493 ஸ்மார்ட் வகுப்புகள், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு இருக்கின்றன.அதேபோல, 10ம் வகுப்பு, பிளஸ் 2க்கு தேவையான வினா விடை வங்கி புத்தகங்களை தயார் செய்து வழங்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி., போன்ற அரசு போட்டித் தேர்வுகளுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயிற்சி வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, 7 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும், பள்ளி பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி வழங்கிய, 1,185 ஆசிரியர்கள், 129 தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாநில அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் வழங்கப்பட்டன.மேலும், மாவட்ட, மாநில அளவில் சிறப்பு நிலை தகுதி பெற்ற, 619 மாணவ, மாணவியர் உள்பட, 2,046 ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு, 30.95 லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசுகளை வழங்கினார்.விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ)செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ