| ADDED : ஜூன் 03, 2024 06:58 AM
கரூர் : சாகுபடி செய்த சோளப்பயிர்கள், தற்போது முதிர்ச்சி அடைந்து அறுவடை பணிகளை தொடங்கி உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கரூர் மாவட்டம், கடவூர், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு இடங்களி சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு, 500 ஏக்கருக்கு மேல் சோள சாகுபடி நடக்கிறது. வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையதால், சோளம் விதைக்கப்படுகிறது. தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலும் சோளம் பயிரிடலாம். சாகுபடி செய்யப்படுகின்ற சோளமானது தானியங்களுக்காகவும், கால்நடை தீவனங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.பெரும்பாலும் நாட்டு சோளம் ரகத்தையே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகை சோளம், நான்கு மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. சித்திரை, மாசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் சோளம் சாகுடிக்கு ஏற்ற பருவம். சித்திரை மாதத்தில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி காற்று அடிக்கும் போது, அயல் மரகந்த சேர்க்கை ஏற்படுவதால் மகசூல் கூடுதலாக இருக்கும். ஆகவே சித்திரை மாத பட்டமே மிகச்சிறந்ததாக அமைகிறது.ஒரு ஏக்கருக்கு, 7 கிலோ விதை சோளம் தேவைப்படுகிறது. இவ்வாறு சித்திரையில் பயிரிட்ட சோளப் பயிர்கள், தற்போது முதிர்ச்சி அடைந்து அறுவடை பணிகளை தொடங்கி உள்ளனர். சில இடங்களில் அறுவடை செய்த சோளங்களை, துாற்றும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.