கரூர் மாவட்டத்தில் தொடரும் கனமழை தோகைமலையில் கொட்டி தீர்த்தது
கரூர், டிச. 4-கரூர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை வரை கனமழை பெய்தது. அதிகபட்சமாக தோகைமலையில், 128 மி.மீ., மழை பதிவானது.பெஞ்சல் புயல் காரணமாக, கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை வரை கரூர் மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. பின் காலை, 8:00 மணி முதல் சற்று வெயில் விட்டு விட்டு அடிக்க தொடங்கியது. சில பகுதிகளில், வானம் மேக மூட்டமாக இருந்தது.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை முடிந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 16.20, அரவக்குறிச்சி, 11.40, அணைப்பாளையம், 15, க.பரமத்தி, 11, குளித்தலை, 55.40, தோகைமலை, 128.60, கிருஷ்ணராயபுரம், 103, மாயனுார், 84.40, பஞ்சப்பட்டி, 95, கடவூர், 26, பாலவிடுதி, 40, மயிலம்பட்டி, 32. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 51.50 மி.மீ., மழை பதிவானது.அமராவதி அணை: திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 427 கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 88 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 73 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மழை காரணமாக, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது. ஆனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு, மழை காரணமாக நேற்று காலை வினாடிக்கு, 1,821 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், கரூர் அருகே பசுபதிபாளையத்தில், அமராவதி ஆற்றில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் நேற்று மூழ்கியது.மாயனுார் கதவணை: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 4,288 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி வரை தண்ணீர் வரத்து வினாடிக்கு, 6,898 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரி யாற்றில், சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்டது. மழை காரணமாக, நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது.ஆத்துப்பாளையம் அணை: க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 30 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.60 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 30 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைப்பகுதி யில், 9.4 மி.மீ., மழை பெய்தது.