ஆற்றில் சாய கழிவுகள் கலப்பது தடுக்கப்படும் சட்டசபை உறுதிமொழி குழு தலைவர் தகவல்
கரூர், அக். 24- 'நொய்யல் ஆற்றில், சாய கழிவுகள் கலக்கப்படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, சட்டசபை உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டசபை உறுதிமொழிக் குழு மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் குழுவின் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான வேல்முருகன் தலைமை வகித்தார். முன்னதாக, புகழூர் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கும் மேம்பாட்டு பணிகளையும், நஞ்சை புகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே, 406 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கதவணையையும் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது குழுவின் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:கதவணையின் பணி, 76 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இந்த அணை, இந்தியாவிலேயே தனி தரத்தோடு நவீன முறையோடு கட்டப்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்படும் கதவுகள் (ஷட்டர்) தரம் வாய்ந்ததாக அமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் சாயக் கழிவுகள் கலக்கப்படுவதை தடுக்கும் வகையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆலைகளை மூட நடவடிக்கை எடுத்ததோடு, வரக்கூடிய காலங்களில் ஜீரோ டிஸ்சார்ஜ் முறைப்படி, கழிவுநீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்படும் நிறுவனங்களுக்கே அனுமதி என, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு கூறினார்.கூட்டத்தில், கரூர் எம்.பி.,ஜோதிமணி, கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.