குளித்தலை: குளித்தலை அடுத்த கூடலுார் பஞ்சாயத்தில், 'மரகத பூஞ்சோலை' உருவாக்குவதற்கான பணிகள் பஞ்., தலைவர் அடைக்கலம் தலைமையில் முழுவீச்சில் நடந்து வருகிறது.தொழில்வளம் நாளுக்குநாள் பெருகி வரும் நிலையில், சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. இருப்பினும், தமிழக அரசு சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதன்படி, அனைத்து கிராமங்களிலும், 'மரகத பூஞ்சோலை' அமைக்க முடிவு செய்து பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல், கூடலுார் பஞ்., பேரூர், 4 ரோடு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில், 'மரகத பூஞ்சோலை' அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், தோகைமலை வனச்சரகத்துக்குட்பட்ட கூடலுார் ஊராட்சி கிராமம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு சொந்தமான, 2.47 ஏக்கர் நிலப்பரப்பளவில், 'மரகத பூஞ்சோலை' உருவாக்கப்படுகிறது.இந்த பூஞ்சோலைக்கு உள்ளே நடைபயிற்சி மேற்கொள்வதற்கு, 'பேவர் பிளாக்' கொண்ட தளங்கள், கழிப்பறை, குடிநீர் வசதி அமைக்கப்பட உள்ளது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின், அதனை பராமரிக்கும் பொறுப்பு, கூடலுார் பஞ்., கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது. இந்த பூங்காவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி பயன் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, மரக்கன்று மற்றும் மூலிகை செடி, மலர் செடிகள் நடுவதற்கும், நடைபயிற்சி தளம் அமைக்கும் பணிகள் பஞ்., தலைவர் அடைக்கலம் தலைமையில் முழுவீச்சில் நடந்து வருகிறது.