கரூர்: கரூரில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தகோரி போராட்டம் நடத்திய மாணவர்களை பள்ளிக்கு செல்லுமாறு மாவட்ட கலெக்டர் நேரில் சென்று அறிவுரை கூறினார்.தமிழகத்தில் சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த கோரி நேற்று தி.மு.க., மாணவர் அணி ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து நேற்று காலை 6 மணி முதல் கரூர் நகரில் உள்ள பள்ளிகள் முன் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.காலை 8.30 மணிக்கு கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை நோக்கி, 'மாணவர்கள் சிலர் சமச்சீர் கல்வியை அமல்படுத்தகோரி கோஷம் போட்டபடி வந்தனர். அப்போது, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் மாணவர்களை தடுத்து நிறுத்தினர்.அந்த சமயத்தில் சம்பவ இடத்துக்கு வந்த கலெக்டர் ÷ஷாபனா மாணவர்களை பார்த்து, 'படிக்கும் காலத்தில் போராட வேண்டாம். சமச்சீர் கல்வி குறித்த நிலைய அரசு கவனித்து கொள்ளும். நீங்கள் பள்ளிகளுக்கு செல்லுங்கள்' என அறிவுரை கூறி விட்டு கிளம்பி சென்றார்.சிறிது நேரத்தில் கரூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் தி.மு.க., வினர் மாணவர்களுக்கு ஆதரவாக, சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும்' என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், உங்களை (தி.மு.க., வினரை) கைது செய்வதாக ஏ.டி.எஸ்.பி., ராஜன் தெரிவித்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினர் அருகிலுள்ள
நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர்.சிறிது நேரத்துக்கு பிறகு ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.,வினர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஒவ்வொருவராக புறப்பட்டுச் சென்றனர். தி.மு.க.,வினர் வேறு இடத்துக்கு சென்று போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதால், ஏ.டி.எஸ்.பி., ராஜன் தலைமையிலான போலீஸார் அவர்ளை பின்தொடர்ந்தனர்.ஆனால், தி.மு.க.,வினர் வெவ்வேறு திசையில் பிரிந்து சென்றதால் போலீஸார் உடனடியாக திரும்பி வந்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக தி.மு.க.,வினர் நேற்று நடத்திய போராட்டத்தால் கரூரில் ஒரு மணி நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.