பேரூர் உடையாபட்டியில் மரகத பூஞ்சோலை பராமரிப்பு பணி மும்முரம்
குளித்தலை, ஜன. 3-கடவூர் யூனியன் தரகம்பட்டி, நல்லமத்துபாளையம் மற்றும் தோகைமலை யூனியன் பேரூர் உடையாப்பட்டி ஆகிய மூன்று கிராமங்கள் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக, அரசுக்கு சொந்தமான நிலங்களில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் தலா, ரூ.23.82 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம், ரூ.71.47 லட்சத்தில் மரகத பூஞ்சோலைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டது.கடந்த ஆக., 14ல் முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக பேரூர் உடையாபட்டி மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, அரசின் மரகத பூஞ்சோலையை பராமரிப்பு செய்வதற்காக, கூடலூர் பஞ்.,நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பஞ்., தலைவர் அடைக்கலம் கூறுகையில்,'' தமிழக அரசுக்கு சொந்தமான நிலங்களை தேர்வு செய்து, ஒரு ஹெக்டர் பரப்பில் வனத்துறையால் உருவாக்கப்பட்டு, இரண்டு ஆண்டு பராமரிப்பு பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மூன்று மரகத பூஞ்சோலைகளிலும் மொத்தம், 2,064 எண்ணிக்கை கொண்ட மரக்கன்றுகள் மற்றும் பழ மரக்கன்றுகள், மருத்துவ தாவர மரங்கள் நடவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, பூங்காவில் ஆங்காங்கே அமரும் நில சாய்வு தளங்கள், பார்வையாளர்கள் அமருவதற்கு நிரந்தர கூடம், நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.