2030ல் கரூர் ஏற்றுமதியை ரூ.50,000 கோடியாக அதிகரிக்க அமைச்சர் செந்தில்பாலாஜி இலக்கு
கரூர்: கரூர் ஏற்றுமதியை, 2030ம் ஆண்டில், 50,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில், தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: தமிழக அரசு கரூர் மாவட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில், 3,000 கோடி ரூபாய் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களை பிற மாநிலங்களும் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கின்றன. கரூர் ஏற்றுமதியை, 2030ம் ஆண்டில், 50,000 கோடி ரூபாய் அதிகரிக்கும் நோக்கில் அதற்கான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின், சாமானிய மக்கள் மனுவோடு நின்றாலே அவர்களை சந்தித்து மனுக்களை பெற்றுக்கொள்கிறார். இந்த ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விரிவாக எடுத்து சொல்லி மக்களவை தேர்தலில், 40க்கு, 40 இடங்களில் வெற்றி பெற்றதை போல, 2026 சட்சபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற கட்சியினர் பாடுபட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், துணை மேயர் சரவணன், மாநகர பகுதி செயலாளர்கள் ராஜா, சுப்பிரமணியன், குமார், ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.