| ADDED : மே 03, 2024 07:16 AM
கரூர் : கரூர் வடக்கு காந்தி கிராமத்தில், பெரும்பாலான இடங்களில் சாலை வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.கரூர் மாநகராட்சி, வடக்கு காந்தி கிராமத்தில் இ.பி.காலனி, பெரியார் நகர் உட்பட, 20க்கும் மேற்பட்ட நகர்களில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பெரும்பாலான தெருக்கள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இங்குள்ள சாலைகளில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பிரதான சாலைகளை தவிர மற்ற இடங்களில், இன்னும் சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை.தற்போது பிரதான சாலையும் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும், குறுக்கு தெருக்கள் மண் சாலையாக இருந்து வருகிறது. மழைக்காலத்தில், சேறும் சகதியுமாக மாறி விடுவதால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். பல தார் சாலைகளில், கழிவுநீர் வடிகால் வசதியில்லாத மாநகராட்சி பகுதியாக உள்ளது. தெருக்களில் கழிவுநீர் ஓடுவதால் பல்வேறு நோய்கள் பாதிக்கும் பகுதியாக உள்ளது. எனவே, இனியாவது சாலை, கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.