| ADDED : ஏப் 19, 2024 06:41 AM
கரூர் : கரூர் லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகளில் தலா ஒரு மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.கரூர் லோக்சபா தொகுதியில் மொத்தம், 1,670 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், வாக்காளர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும் விதமாக, சட்டசபை தொகுதிகளில் தலா ஒன்று என, ஆறு மாதிரி ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், கரூர் சட்டசபை தொகுதியில், வெங்கமேடு ஈக்விடாஸ் குருகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணராயபுரம் தொகுதியில், புலியூர் ராணிமெய்யம்மை மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி தொகுதியில், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.வேடசந்துார் தொகுதியில் வேடசந்துார் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, மணப்பாறை தொகுதியில் மணப்பாறை கோவில்பட்டி லெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விராலிமலையில் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி என மாதிரி ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளது.கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, அரவக்குறிச்சியில் பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கிருஷ்ணராயபுரத்தில் வெள்ளியணை அரசு உயர்நிலைப்பள்ளி, வேடசந்துாரில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மணப்பாறையில் கோவில்பட்டி லெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விராலிமலையில் இழுப்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பெண்கள் மட்டும் ஓட்டளிக்கும் வகையில் ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.மாதிரி ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்களை வரவேற்க சிவப்பு கம்பளம் விரிக்கப்படும். வெயில் தாக்கத்தை குறைக்க ஷாமியான பந்தல் போடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் காத்திருந்து வாக்களிக்க உயர்தர இருக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மட்டும் ஓட்டளிக்கும் மையங்களில் பெண் அலுவலர்கள் மட்டும் பணி அமர்த்தப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.