ப.வேலுார் ராஜவாய்க்கால் கரையோரத்தில் குப்பை கொட்டப்படுவதால் விவசாயிகள் அதிருப்தி
ப.வேலுார்: ப.வேலுார் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை, டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ராஜவாய்க்கால் கரையோரத்தில் கொட்டுவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்டு, 18 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பையை டிராக்டர்கள் மூலம் பழைய பைபாஸ் சாலையில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ள டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். கடந்த சில நாட்களாக குப்பையை கிடங்கில் கொட்டாமல் அப்படியே தரம் பிரிக்காமல் நாமக்கல், கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே ராஜவாய்க்கால் கரையோரத்தில் ப.வேலுார் தூய்மை பணியாளர்கள் கொட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடத்த சில மாதங்களுக்கு முன் குப்பை இந்த இடத்தில் மழை போல் தேங்கியதால் சுகாதார கேடு ஏற்பட்டது. இதனால் ப.வேலுார் நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் வினோத்குமார், ராஜாவாய்க்காலின் அருகே குப்பை கொட்ட கூடாது என ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்கு நோட்டீஸ் கொடுத்தார். அதன் பிறகு டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் அவ்விடத்தில் குப்பையை கொட்டாமல் இருந்தனர். தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதே இடத்தில் குப்பை கொட்டி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.மேலும் விவசாயத்துக்கு வாழ்வாதாரமாக இருக்கும் ராஜவாய்க்காலின் கரையோரத்தில் குப்பை கொட்டுவதால் நாளடைவில் ராஜவாய்க்கால் குப்பைகளால் நிறைந்துவிடும் அபாயம் உள்ளது. இந்த இடத்தில் கொட்டிய குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி வார்டு கவுன்சிலர் சுகந்தி கூறியதாவது: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில் சேகரிக்கப்படும் குப்பையை, குப்பை கிடங்கில் கொட்டாமல் ராஜ வாய்க்காலின் கரையோரத்தில் தேசிய நெடுஞ்சாலை சாலையிலும் கொட்டி வருவதால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு உள்ளாகின்றனர். மேலும் குப்பையில் தீ வைக்கப்படுவதால், அதில் இருந்து வெளியேறும் புகையால், பொது மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்துமா நோயால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குப்பை கொட்டாமல் இப்படி சாலையிலேயே கொட்டி வருவதற்கு உரிய காரணம் தெரியவில்லை. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை அருகே குப்பை கொட்டினால் பொதுமக்களை திரட்டி டவுன் பஞ்சாயத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட நேரிடும். இவ்வாறு கூறினார்.