கலெக்டர் அலுவலகம் எதிரே பயன்படுத்த முடியாத நிலையில் பயணிகள் நிழற்கூடம்
கரூர்கரூர் கலெக்டர் அலுவலகம் எதிரே, பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், நிழற்கூடம் உள்ளது. அதை, சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் - திண்டுக்கல் பழைய சாலை கலெக்டர் அலுவலகம் எதிரே, சில ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. அதில், கரூரில் இருந்து வெள்ளியணை, பாளையம், திண்டுக்கல் பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணிகள் ஏற்றி செல்லப்பட்டனர்.இந்நிலையில், பயணிகள் நிழற்கூட சுற்றுச்சுவர் சேதமடைந்தது. மேலும், நிழற்கூடத்தை சுற்றி, கழிவுநீர் வாய்க்கால் சமீபத்தில் கட்டப்பட்டது. இதனால், நிழற்கூடம் தாழ்வான பகுதியில் உள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள், நிழற்கூடம் முன் நிறுத்தப்படுவது இல்லை.நிழற்கூடம் இல்லாத இடத்தில், பஸ்கள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் கடும் வெயிலில் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் - திண்டுக்கல் பழைய சாலை, கலெக்டர் அலுவலகம் எதிரே, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள, பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கரூர் மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.