லாலாப்பேட்டையில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்
கிருஷ்ணராயபுரம், கருப்பத்துார் பஞ்சாயத்து வேங்காம்பட்டி கிராமத்தில், குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், லாலாப்பேட்டை பஸ் ஸ்டாபில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.வேங்காம்பட்டி கிராமத்துக்கு பஞ்சாயத்து சார்பில், தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் பிரச்னை நிலவி வந்தது. இதனால் மக்கள் தண்ணீருக்கு சிரமப்பட்டனர். இந்நிலையில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி நேற்று காலை, 10:00 மணிக்கு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் பகுதியில், கரூர் கிழக்கு மாவட்ட வி.சி.,கட்சி மற்றும் வேங்காம்பட்டி கிராம மக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.இதனால் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை லாலாப்பேட்டை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். வி.சி., மாவட்ட செயலர் சக்திவேல், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலர் மகாமுனி, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன், மண்டல துணை செயலர் பெரியசாமி, வேங்காம்பட்டி மாணிக்கராஜ் உள்பட, 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.