பராமரிப்பின்றி நிழற்கூடம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே மோளையாண்டிப்பட்டியில், சேதமடைந்துள்ள நிழற்கூடத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி அருகே மோளையாண்டிப்பட்டி பகுதி யில், தினமும் நுாற்றுக்கணக்கானோர், பஸ்களை பயன்படுத்தி வெளியே செல்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் இப்பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் சூழலில், சேதமடைந்த நிழற்கூடத்தால் சிரமப்படுகின்றனர். வெயில், மழையால் நிற்க இடமின்றி தவிக்கின்றனர். மழை காலங்களில் குடை, பிளாஸ்டிக் துணி போன்றவற்றை பயன்படுத்தி, தற்காலிகமாக சரி செய்து கொள்ளலாம். ஆனால் வெப்பத்தால் அவதியுறும் நிலை தொடர்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள நிழற்கூடத்தை அகற்றிவிட்டு, புதிய நிழற்கூடத்தை அமைத்து தர வேண்டும். மேலும், அனைத்து பஸ்களும் இந்த நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.