ஆறாக ஓடிய மழைநீர்: சாலை, வடிகால் சேதம்
கரூர்:தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கரூர் மாவட்டத்திலும், பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் நகரில் இரவு நேரத்தில், மழை பெய்து வருகிறது. கழிவு நீர் வாய்க்கால்கள் சரிவர துார்வாரப்படாததால், மழைநீர் சாலையில் ஓடும் நிலை, கரூர் மாநகர பகுதிகளில் உள்ளது.கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த, 17ல், 31.80 மி.மீ., மழையும், 18ல், 54.60 மி.மீ., மழையும் பெய்தது. இதனால், கரூர் நகரில் கோவை சாலை, உழவர் சந்தை சாலை, ஜவஹர் பஜார், ஆண்டாங்கோவில் சாலை, பழைய அரசு மருத்துவமனை சாலை, தெரசா கார்னர், காந்தி கிராமம் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது.அதில், காந்தி கிராமம் தின்னப்பா நகர் பிரதான சாலை, மழைநீர் ஓடியதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்துள்ளது. அதையொட்டியுள்ள, மழைநீர் வடிகால் வாய்க்காலும், சேதமடையும் நிலையில் உள்ளதால், மண் அரிப்பு ஏற்பட்ட தார்ச்சாலையை சீரமைக்க, கரூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.