கோடை மழை துவங்கும் முன் சாக்கடையை துார்வார கோரிக்கை
கரூர்: கரூர் நகரில், கோடை மழை துவங்கும் முன், சாக்கடை கால்வாய்களை துார் வார வேண்டும் என்ற, பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன், வடகிழக்கு பருவமழை பெய்த போது, கரூர் நகர பகுதிகளான கோவை சாலை, ஜவஹர் பஜார், தின்னப்பா கார்னரில் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில், கார், இருசக்கர வாகனங்களில் கூட, செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கரூர் நகரில் கடந்த, 10 நாட்களாக கோடை காலத்தையொட்டி, வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில், கோடை மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கரூர் நகரில் அதிகளவில் மழை பெய்யும் போது, சாலைகளில் தேங்கும் அபாயம் உள்ளது. இதனால், கரூர் நகரில் உள்ள சாக்கடை கால்வாய்களை துார் வார வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து, பல மாதங்களாகிறது. மண், பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லை. கரூர் மாவட்டத்தில், கோடை மழை பெய்தால், தண்ணீர் தேங்குவதை தடுக்க, கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.