சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம்
குளித்தலை, குண்டும் குழியுமான குமாரமங்கலம் நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி, கிராம மக்கள் நெல் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குளித்தலை அடுத்த குமாரமங்கலம், நடுப்பட்டி, பணிக்கம்பட்டி, தோகைமலை செல்லும் பிரதான நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மருதுார் காவிரி ஆற்றில் இருந்து, சிவகங்கை காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.இந்நிலையில் குமாரமங்கலத்தில், சாலை ஓரத்தில் தோண்டப்பட்ட குழியால், சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் குழியில் விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையை சரிசெய்ய கோரி முதல்வர், கலெக்டர், எம்.எல்.ஏ., மற்றும் நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர், ஒன்றிய ஆணையரிடம் பல முறை புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் யாரும் சரிசெய்ய முன்வரவில்லை.இரண்டு நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் வாகனங்கள் சிக்குகின்றன. நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்ற தம்பதியர், கீழே விழுந்து படுகாயமடைந்து. குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், நெடுஞ்சாலை துறை நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை 10:00 மணியளவில் கிராம மக்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, நெல் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.