அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு மூன்றாம் பருவ பாட புத்தகம் வினியோகம்
கரூர், ஜன. 3-அரையாண்டு விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கரூரில் உள்ள பள்ளிகளில் நேற்று மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது.தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும், அனைத்து வகை பள்ளிகளிலும் அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள் கடந்த டிச., 9 முதல், 23 வரை நடத்தப்பட்டன. 24- முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், விடுமுறைக்கு பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு தேவையான மூன்றாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட கல்வி பொருள்களை வழங்க அரசு உத்தரவிட்டது.அதன்படி நேற்று, கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என, 751 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, 38,812 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, முதல் நாளான நேற்று மூன்றாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.