மேகபாலீஸ்வரர் கோவிலில்
வளர்பிறை அஷ்டமி பூஜை
கரூர்: நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியை யொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.அதில் மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திரு மஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட, வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. பிறகு, கால பைரவர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், புன்னம் புன்னை வனநாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்த மேடு ஈஸ்வரன் கோவில்களில், வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியை யொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.டி.என்.பி.எல்., சார்பில் வரும்
21ல் இலவச மருத்துவ முகாம்
கரூர்: டி.என்.பி.எல்., (புகழூர் காகித ஆலை) சார்பில், 293 வது இலவச மருத்துவ முகாம் வரும், 21 ல் நடக்கிறது. அதன்படி, ஓனவாக்கல் மேடு, நாணப்பரப்பு, கந்தசாமிபாளையம், நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதுார், குறுக்குப்பாளையம் ஆகிய பகுதிகளில் வரும், 21 காலை, 8:00 மணி முதல், மதியம், 1:30 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. டாக்டர்கள் செந்தில்குமார், சுகந்தி ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்க உள்ளனர். இந்த இலவச மருத்துவ முகாமை, கிராம மக்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என, டி.என்.பி.எல்., ஆலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குப்பைகளை கொட்ட
தொட்டி வேண்டும்
கரூர்: கரூர் அருகே வாங்கப்பாளையத்தில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அந்த பகுதிகளில், குப்பைகளை சேகரிக்கும் வகையில் தொட்டிகள், மாநகராட்சி சார்பில் அதிகளவில் வைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குப்பையை சாலையில் கொட்டி வருகின்றனர். தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி விட்டு, புதிய தொட்டிகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
குளித்தலை வதியத்தில்
கிராம சபை கூட்டம்
குளித்தலை: குளித்தலை அடுத்த, வதியம் பஞ்., மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.பஞ்., தலைவர் குணாளன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். பஞ்., செயலாளர் கதிர்வேல், பொதுமக்களிடம் கிராம சபை கூட்டம் குறித்து எடுத்துரைத்தார். இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம், சமூக தணிக்கை வள பயிற்றுனர்களிடம் வழங்கினர். இதில் வார்டு உறுப்பினர்கள், 100 நாள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.