மகாதானபுரத்தில் ரயில்வே போலீசார் சார்பில் விழிப்புணர்வு சிறப்பு முகாம்
கரூர், கரூர் அருகே, ரயில்வே போலீசார் சார்பில் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.கடந்த ஒரு மாதமாக, தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில், கரூர் - திருச்சி ரயில்பாதை, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ரயில் பாதைகளில் ரயில்வே தண்டவாளங்களையொட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் சிறுவர், சிறுமியர் தண்டவாளங்களை கடந்து சென்று விளையாடுவது, கற்கள், இரும்பு துண்டுகள், சில்லரை காசுகளை தண்டவாளத்தில் வைப்பது போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.சமீபத்தில், கரூர் - திண்டுக்கல் ரயில்வே பாதையில் தான்தோன்றிமலை அருகே, தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைக்கப்பட்டதால், தண்டவாளம் சிறிது சேதமடைந்தது. இதனால், கோடை விடுமுறையில் உள்ள சிறுவர், சிறுமிகளை அழைத்து விழிப்புணர்வு நடத்த, கரூர் ரயில்வே போலீஸ் நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி, நேற்று கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடம் மகாதானபுரத்தில், ரயில்வே போலீசார் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், ரயில்வே தண்டவாளம் பகுதியில் வசிக்கும் சிறுவர், சிறுமியர் அழைக்கப்பட்டு, தண்டவாளங்களை கடக்கக் கூடாது, கற்கள், இரும்பு துண்டுகள் வைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.விழிப்புணர்வு முகாமில், ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., செல்வராசு, தலைமை காவலர் வேல் முருகன் உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.