| ADDED : மார் 06, 2024 02:21 AM
கரூர்:கரூர்
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கிராம பஞ்சாயத்துகளில் கோடை கால
குடிநீர் பிரச்னைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து கூறியதாவது:மாவட்டத்தில்,
15வது நிதிக்குழு மானியம், மாநில நிதிக்குழு மானியம், சிறுகனிம நிதி
ஆகிய திட்டங்களின் கீழ், நாளது தேதி வரை நிர்வாக அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் பணிகளை விரைந்து முடித்து உடனடியாக
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், குடிநீர் பணிகளில்
ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்து, அன்றைய தினமே சீரான
குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் வினியோகம்
தொடர்பாக அவ்வப்போது வரப்பெறும் புகார்கள் தொடர்பாக, உடனடியாக
நேரில் களஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கோடை
காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்திட, முறையற்ற குடிநீர்
இணைப்புகளை ஆய்வு செய்து துண்டிப்பு செய்ய வேண்டும். அனைத்து
வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க பெறுவதையும், குடிநீரினை
சிக்கனமாக பயன்படுத்திட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்திட வேண்டும். இது தொடர்பாக உதவி இயக்குனரை (ஊராட்சி)
7402607685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், உதவி இயக்குனர் (ஊராட்சி) சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.