கோவில் நில ஆக்கிரமிப்பாளர்கள் அரசை இயக்குகின்றனர் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் குற்றச்சாட்டு
கரூர்:''கோவில் நில ஆக்கிரமிப்பாளர்கள், இந்த அரசை பின்னணியில் இருந்து கொண்டு இயக்குகின்றனர்,'' என, திருத்தொண்டர்கள் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று சுவாமி தரிசனம் செய்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 20 ஆண்டுகளாக கோவில் சொத்துகளை மீட்பதில், தீவிரம் காட்டி வருகிறோம். பல ஆட்சிகள் மாறிய நிலையிலும், நீதிமன்ற உத்தரவுபடி, கோவில் சொத்துகள் மீட்கப்பட்டு வருகின்றன. கோவில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் வகையில், தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதற்கு, தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இந்த அரசாணை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த சட்ட விரோதமான அரசாணையை, பொதுமக்கள் நம்பி, கோவில் சொத்துகளை வாங்கி ஏமாற வேண்டும். தமிழக அரசின் இந்த அரசாணையை, நீதிமன்றம் மூலம் ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்டா நிலங்கள், மானிய நிலங்கள், ஊழியம் நிலங்கள் என, மூன்று வகையாக கோவில் நிலங்கள் உள்ளன. அதற்கு, புதிய அரசாணை மூலம் ஆபத்து வந்துள்ளது. அதை தடுக்க வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்த போது, கோவில் நிலங்கள் மீட்கப்பட்டன. கோவில் சொத்துகள் பாதுகாக்கப்பட்டு, அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் உரிய வருவாய் கிடைத்தது. ஆனால், அவரது மகன் ஸ்டாலின் முதல்வராக உள்ள ஆட்சியில், அந்த வாய்ப்புகள் பறி போகிறது. கோவில் நில ஆக்கிரமிப்பாளர்கள், இந்த அரசின் பின்னணியில் இருந்து கொண்டு இயக்குவது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.