திருக்குறள் இடம் பெறாத அரசு துறை தேர்வுகள் எதுவும் இல்லை: டி.ஆர்.ஓ.,
கரூர், டிச. 24-'' திருக்குறள் இடம் பெறாத அரசு துறை தேர்வுகள் எதுவும் இல்லை,'' என, டி.ஆர்.ஓ., கண்ணன் தெரிவித்தார்.கரூர் மாவட்ட பொது நுாலகத்துறை, மாவட்ட மைய நுாலக வாசகர் வட்டம் சார்பில், திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா கருத்தரங்கம் மற்றும் புகைப்பட கண்காட்சி தொடக்க விழா, மாவட்ட மைய நுாலகத்தில் நேற்று நடந்தது.அதில், கருத்தரங்கு மற்றும் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து டி.ஆர்.ஓ., கண்ணன் பேசியதாவது:உலக பொதுமறை நுாலாக திருக்குறள் உள்ளது. இன்றைய இளம்தலைமுறையினருக்கு தேவையான கருத்துகள் திருக்குறளில் உள்ளது. திருக்குறள் இடம் பெறாத அரசு துறை தேர்வுகள் எதுவும் இல்லை. திருக்குறள் நல்ல வாழ்க்கைக்கான வாழ்வாதாரத்தை அளிக்கிறது. இதனால், திருக்குறளை படிக்க வேண்டும். அதன்படி வாழ வேண்டும்.இவ்வாறு பேசினார்.விழாவில், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், திருக்குறள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், வாசகர் வட்ட தலைவர் சங்கர், அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முரளி உள்பட பலர் பங்கேற்றனர்.