குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பாக, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி மேற்பார்வையில் தோகைமலை, கீழவெளியூர், ஆர்.டி.மலை, ஆலத்துார், நெய்தலுார், கூ.உடையாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அ.உடையாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி என, ஏழு குறுவள மையங்களில் பயிற்சி நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர்கள் முகமது நிஜாம், ஸ்டாலின், பாலகிருஷ்ணன், மலர்விழி, லதா, செந்தாமரை, பொன்னுச்சாமி ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம்-2009-ன் படி பள்ளி மற்றும் குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக, அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அனைத்து வகையிலும் பள்ளிகளை மேம்படுத்துவதோடு, பள்ளி குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதை உறுதி செய்கிறது. மேலும் சமூகத்தின் ஒரு அங்கமான பெற்றோர்களின் பங்கேற்பு என்பது முக்கியமானது ஆகும். இதை மேம்படுத்துவதற்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பணிகள், துணை குழுக்களின் பணிகள், பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல் மற்றும் மொபைலில் ஆப் பதிவேற்றம் செய்தல் குறித்து பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.தோகைமலை யூனியனில் உள்ள, 83 அரசு பள்ளிகளில் இருந்து பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணை தலைவர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர் (இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்) என்று தலா, 5 பேர் வீதம் கலந்து கொண்டனர்.